Wednesday, December 11, 2019

நில ஆக்கிரமிப்பு சட்டம் - ஒரு அலசல் :-

நில ஆக்கிரமிப்பு சட்டம் - ஒரு அலசல் :-
அரசாங்கத்திற்கு உரிய நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டால் 7 வகையான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
(1)- தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905
(2)- தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920
(3)தமிழ்நாடு நீர் நிலைகள் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம் 2007
(4)- தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994
(5)- தமிழ்நாடு பொதுக் கட்டடம் (அனுமதிக்கப்படாத ஆக்கிரமிப்பு) சட்டம் 1975
(6)- தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1958
(7)- தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டம் 2001.
ஒருவர் அரசாங்க நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார் என்பதற்காக அவரை அடாவடியாக காலி செய்ய அரசால் முடியாது. அதற்கென சில விதிகள் உள்ளது.
முதலில் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ள நபருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுப்பார்கள். அந்த நோட்டீஸில் அவர் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலத்தின் அளவை குறிப்பிட்டிருப்பார்கள்.
இந்த நிலத்துக்கு ஏதாவது வரி விதிக்கப்படுகிறதா? என ஆராய்ந்து, வரி விதிக்கப்பட்டிருந்தால் முழு வரியையும் வசூல் செய்ய நடவடிக்கை எடுப்பார்கள்.
வரி விதிக்கப்படாத நிலமாக இருப்பின் அதற்குரிய தண்டத் தீர்வையையும் அதாவது அபராதத்துடன் வரியையும் சேர்த்து ஆக்கிரமிப்பாளரிடம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவுறுத்துவார்கள்.
ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ள பயிர் விளைச்சல், உபகரணங்கள், கட்டுமானங்கள் ஆகியவற்றை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது என காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவார்கள்.
அரசாங்க நிலத்தில் கட்டடம், பயிர் விளைச்சல்கள் என எது செய்திருந்தாலும் தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டப்பிரிவு 6(1)ன் கீழ் பறிமுதல் செய்ய கால அளவு நிர்ணயம் செய்வார்கள்.
7 ம் நம்பர் நோட்டீஸ் என்று ஒன்று உண்டு. அதில் குறிப்பிட்ட தேதியில் உங்கள் நிலத்தில் உள்ள அத்தனை பொருட்களையும் பறிமுதல் செய்து அரசே கையகப்படுத்தும் என்று அறிவிப்பு தருவார்கள். அதற்குள் நீங்கள் காலி செய்து கொள்ளலாம்.
கண்டிப்பாக "இன்ன தேதிக்குள் " என்று தான் அறிவிப்பார்கள். ஒரு வாரத்திற்குள், பத்து நாளைக்குள் என்று கால அளவு நிர்ணயம் செய்ய மாட்டார்கள்.
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்தால் அந்த துறை அதிகாரிகளே நடவடிக்கை எடுக்க அதிகாரம் உடையவர்கள்.
தேவையான நேர்வுகளில் வருவாய் துறையை சார்ந்தவர்களின் ஒத்துழைப்பை நாடலாம். பஞ்சாயத்துக்கு உட்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தால் வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்க அதிகாரம் பெற்றவர்கள். நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்தால் நகராட்சி ஆணையர், பேரூராட்சி ஆணையர் மூலம் நடவடிக்கை எடுப்பார்கள்.
பல பொது இடங்கள் ஆக்ரமணச் சட்டத்திற்கு உட்படாத நிலமாக இருக்கும். இப்படிப்பட்ட நேர்வுகளில் வருவாய் கோட்டாட்சியர் முன்னின்று நடவடிக்கை எடுக்க அதிகாரம் பெற்றவர்.
நீங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை காலி செய்ய வேண்டும் என்று அறிவிப்பு வந்தவுடன் நீங்கள் அதற்கு உடனடியாக பதில் கொடுக்க வேண்டும். உங்கள் பதிலில் திருப்தி இல்லை என்றால் திரும்பவும் பிரிவு 6(1)ன்படி ஒரு நோட்டீஸ் அனுப்புவார்கள். அதனை எதிர்த்து நீங்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பிரிவு 10 ன் கீழ் மேல்முறையீட்டு செய்ய வேண்டும்.
அந்த மேல்முறையீட்டு மனுவில் வட்டாட்சியர் அல்லது துறை சம்மந்தப்பட்ட அலுவலரின் அறிவிப்புக்கு இடைக்கால தடை கோரி சேர்த்து மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.
பின்னர் உயர்நீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மற்றும் இடைக்கால மனுவை காரணம் காட்டி தடை உத்தரவு பெற்று ஆக்கிரமிப்பு நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துக் கொள்ளலாம்.
பா.வெ.

No comments:

Post a Comment